தமிழ் ஜோதிட களஞ்சியம்
பன்னிரு லக்கினங்கள்
ஜாதகத்தில் லக்கினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். லக்கினம் என்பது ஜாதகத்தில் முதல் வீடாகும். இது ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. பன்னிரு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்களை இங்கு காணலாம்.
மேஷ லக்கினம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர் செம்பு நிறமுடையவர். கோழை அதாவது கபம் பிருகிருதி உள்ளவர். முன்கோபம் வரும். மந்த புத்தி, ஸ்திரமான தன்மை, பெண் போக பிரியர், குணசாலி, தன் முயற்சியால் புகழ் அடைபவர், பேசுவதைவிட எழுதுவதில் சமர்த்தர், மதிம சரீரம் உடையவர். இரு தாரங்கள் அமைய வாய்ப்பு உண்டு. ஆயுதம், துப்பாக்கி சூடு,கல், மரத்திலிருந்து விழுதல், சுவரிடிந்து விழுதல், வெட்டு, குத்து இவற்றால் காயம் ஏற்படும். அற்ப சந்ததி உள்ளவர். அரசு தொடர்புடைய உத்தியோகம் அமையும், 5 வயதில் நெருப்பாலும், 7 வயதில் தண்ணீராலும், 10வது வயதில் காய்ச்சலாலும், 20 வது வயதில் காது வாயில் நோயாலும், 22 வது வயதில் பாம்பாலும், 25 வது தண்ணீரில் கண்டமும், 28 வயதில் உடலில் ஏற்படும் காட்டியல் கண்டமும் ஏற்படும். பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.
ரிஷப லக்கினம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர், உண்மையே பேசுபவர், கணிதத்தில் புலமையுடையவர், புதுபுது ஆடைகளை உடுப்பதிலும் விருப்பமுள்ள ஆடம்பர பிரியர். குழந்தைதனம் மிக்கவர். ஞாபக சக்தி உடையவர், பிறர் பொருளை வாங்கி செலவு செய்வதில் ஆர்வமுடையவர், சிறு குழந்தைகளின் மேல் பிரியமுடையவர். இவர் பிறந்தவுடன் ஆயுதம் போன்ற கருவியால் தாக்கப்பட்டு ரண காயம் ஏற்பட வாய்ப்புண்டு. சுப காரியங்களில் பிரியமுள்ளவர், குழந்தைகள் பெரும்பாலும் பிற்காலத்தில் தான் பிறக்கும். இவர் சங்கீத, நடன கலைகளில் வல்லவர், இலக்கிய ரசனையும் ஸ்திர புத்தியும் உள்ளவர், இனிப்பு சுவையில் பிரியம் உள்ளவர், சிற்றின்ப பிரியர், செடி கொடி பூஞ்சோலைகள் வைப்பதில் ஆர்வமுள்ளவர், நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உண்டு. பல் நோய், டான்சில் நோய் ஏற்படலாம், களத்திர தோஷமுண்டு. 5 வது வயதில் நெருப்பினாலும், 16 வது வயதில் கண்ட மாலையினாலும், 19 வது வயதில் இருமலினாலும், 20, 27 வது வயதில் காய்ச்சலினாலும் ஆபத்து ஏற்படும். இவர் ஆணி மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் உத்திரட நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை சுரத்தால் மரணமடையலாம்.
மிதுன லக்கினம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள்ஆசை நிறைய உடையவர்கள். ஆசார சீலர். இனிமையாக பேசுபவர்கள், காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள், பித்த நோயும், சிவந்த நிறமும் உடையவர்கள், சந்தர்ப்பவாதி, இரட்டை குணமுள்ளவர், இடுப்புக்கு மேல் பாகம் உயரம், கைகள் நீளம், வயிறு பெரிதாக இருக்கலாம். பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார். சளி, டி.பி, இன்புளுயன்சா மற்றும் சுவாச நோய்கள் ஏற்படலாம். இரு தாரம் ஏற்படலாம். 3 ஆம் வயதில் கண்டமும், 5 ஆம் வயதில் நெருப்பாலும், 8 வது வயதில் ஆயுதத்தாலும், 10 வது வயதில் பகைவர்களாலும் ஆபத்துகள் ஏற்படும். 18 வது வயதில் வாயு கோளாறினாலும், 28 வது வயதில் கண் நோயும் ஏற்படும். ஆணி மாத சதுர்த்தசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை இரவு இருதய நோயால் மரணமடையலாம்.
கடக லக்கினம்
கடக்க லக்கினத்தில் பிறந்தவர்கள் வாக்கு வன்மையுடன் சாமர்த்தியமாக பேச வல்லவர்கள். பென்னசையுடயவர்களாதலால் விலை மாதர் நட்பு உடையவர்கள். சிவந்த நிறமும் கொண்டவர்கள், செல்வந்தர்-நவதானிய வியாபாரம் லாபம் தரும் தொழிலாகும். குருவே தெய்வமென போற்றுவார். மறைவிடங்களில் மஞ்சமுடையவர். நீர், கடல் சம்பந்தமான தொழில் செய்வர். ஹோட்டல், உணவு சம்பந்தமான தொழிலும் செய்வர். 5,16,20,25,40 வயதில் கண்டம் உண்டாகலாம். இவர்கள் மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் மிருகசீரிச நட்சத்திரத்தில் புதன்கிழமை மரணமடைவார்கள்.
சிம்ம லக்கினம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் உணவில் தீராத ஆசையுடயவர்கள், அர்ச்சகராக வேதம் ஓதுபவர்களாக தொழில் புரிவார்கள், தர்மகுணம் கொண்டவர்கள், சுய தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள், கடுகடுப்பும் சினமும் வெளிப்படும் தோற்றம், அரச யோகத்தை குறிக்கும் சாமுத்ரிகா லக்ஷணங்களை உடையவர். தன் கெளரவம் கெடாமல் பார்த்து கொள்வார், சுதந்திர உணர்வுகள் அதிகம், சங்கீதம், நாடகம், இசை இவற்றில் பற்றுண்டு. சங்கீத நாடக, சினிமாத்துறை, அரசு துறை உத்தியோகம் அமையலாம். 5,10,27,30 வயதுகளில் காய்ச்சல் ஏற்பட்டு குணமாகலாம். இவர் பங்குனி மாதம் தேய்பிறை பிரதமை (அல்லது பெளர்ணமி) திதியில் அஸ்த நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை பகலில் மரணமடையலாம்.
கன்னி லக்னம்
ஆசார சீலர், தர்ம குணமுடையவர், இறக்க மனப்பாங்குடையவர், பல தொழில் செய்பவர், செல்வ நிலையில் ஏற்ற இரக்கமுடையவர். இளமையில் கஷ்டபடுபவர். பிற்காலத்தில் செல்வம் சேரும். பெற்றோரை பாதுகாப்பவர், பிறரால் தொழில் வாய்ப்பும் அதில் முன்னேற்றமும் உண்டு. வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் கலந்த நோய் ஏற்படக்கூடும். காலில் மறு இருக்கும். கலை, இலக்கியம், எழுத்து, இசை இவற்றில் வல்லவர், வழக்காடி வெற்றி பெறுவதில் நிபுணர், விஞ்ஞானம், கணிதம், ஜோதிடம் இவற்றில் வல்லவர். மருத்துவம், சமய சொற்பொழிவு இவற்றில் ஈடுபாடு உண்டு. சமய ஈடுபாடும், தளவழிபாட்டு ஈடுபாடும் உண்டு. பெட்டிக்கடைகள், குமாஸ்தா தொழில்கள், ஆடிட்டர் போன்ற தொழில்கள் செய்பவர். புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர், ஆவண பதிவாளர், காரியதரிசி, பங்கு சந்தை நிபுணர்.
விஷ காய்ச்சல், வாயிற்று கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் எளிதில் பற்றிகொள்ளும். 5 வயதில் நெருப்பாலும், 10 வது வயதில் காய்ச்சலாலும், 18 வது வயதில் அம்மை நோயாலும் கண்டம் ஏற்படும். வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.
துலாம் லக்னம்
இனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அரசு துறை வேலை வாய்ப்பு பெறுவார். அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள். இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. எல்லாருக்கும் இனியவர், வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டு. சிலேத்தும, அதாவது சளி நோய் உள்ளவர். பெண்களை கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிக தேர்ச்சி பெறுவார். கற்பனை திறன் அதிகம். இடுப்பு பகுதியில் நோய், நீரிழிவு நோய் இவற்றால் பாதிக்கப்படலாம். 7 வது வயதில் வியாதியாலும், 12 வது வயதில் நெருப்பாலும், 19 வது வயதில் அம்ம்மை நோயாலும், 28 வது வயதில் பகைவர்களாலும், 48 வது வயதில் தண்ணீராலும் கண்டம் ஏற்படும். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.
விருச்சிக லக்கினம்
பெற்றோரிடம் பாசம் மிக்கவர். மனைவியிடம் அன்பு காதலுடையவர். இனிமையாக பேசும் ஆற்றலுடையவர். எடுத்த காரியத்தை திறமையுடன் முடிப்பவர். வலிமையான கால்கள், திரண்டுருண்ட தோள்கள், வேகமான நடை இவற்றையுடயவர். கேட்போர்க்கு மறுக்காது கொடுப்பவர். நன்றாக பேச வல்லவர். இவர் பேச்சுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும். தம் உறவினர்களிடம் துவேஷம் உள்ளவர். காம இச்சை அதிகம் உள்ளவர். மனைவியிடத்தில் அதிக ஆசை உள்ளவர். சாஸ்திரப்படி நடப்பவர். சத்ருகளை ஜெயிப்பவர். வலிமையான உடலும், முரட்டுத்தனத்தை எடுத்துக்காட்டும் தோற்றம் உள்ளவர். எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர். வட்டி தொழில், பைனான்ஸ் செய்வதில் வல்லவர். இரசாயன துறை, சுரங்க வேலை, சித்த வைத்தியம், பந்தய, சூட்ட, காபரே நடன தொழில் நடத்தலாம். விவசாய தொழில், துறைமுக தொழில், விளையாட்டு, மின்வாரியம் போன்ற தொழில்களும் அமையலாம். 5 வது வயதில் காய்ச்சலாலும், 10, 12, 18 வது வயதில் நெருப்பாலும், 40 வது வயதில் வாதம், காய்ச்சலாலும் கண்டம் ஏற்படும். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார்.
தனுசு லக்னம்
இவர்கள் மூத்தவர்களுக்கு பயப்படாதவரும் இளையவர்களுக்கு அஞ்சுபவர்களும் ஆவர். கல்வியாளர். பகைவர்களை வெல்பவர். இளம் வயதில் செல்வமுடையவர். எந்த காரியத்திலும் லாப நஷ்டம் பார்ப்பவர். திருமாலின் பொலிவுள்ளவர். வாசனை பொருட்களில் விருப்பம் உள்ளவர். படிப்பாளி. தம் தாய் தந்தையை காப்பவர். வாகன பாக்கியம் உண்டு. நல்ல கட்டான உடல் வாகும் முக்கோண முகமும், சிவந்த நிறமும் உள்ளவர். உதட்டில் குழிவிழுந்த அதிர்ஷ்ட அடையாளம் உண்டு. நிறைய ரோமம் உண்டு. தத்துவம், ஞானம் வேதாந்தம் முதலியவற்றில் விருப்பம் உண்டு. அரசாங்க உத்தியோகத்திற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கரிஞர் , ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோஹிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வி துறை, பதிப்பு துறை, போன்ற தொழில்கள் அமையலாம். 3, 10, 32, 40 வது வயதில் கண் நோயால் பாதிக்கப்படலாம். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிகிழமை மாலை இயற்கை எய்தலாம்.
மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் அழகை ஆராதிப்பவர்கள். மலர்களின் மேல் விருப்பமுள்ளவர்கள். சிவந்த நிறமுடையவர். மனைவி / கணவன் மேல் பிரியமுடையவர்கள். மறைவிடத்தில் மச்சமுள்ளவர். திரிலோக சஞ்சாரியாக ஊர் சுற்றுபவர். பலதுறை கல்வியும் காரியம் சாதிக்கும் வலிமையும் பெற்றவர்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறனும் உள்ளவர். சுய நலம் மிக்க காரியவாதி. மனைவியிடம் அதிக அன்புள்ளவர். படிப்பில் மந்தமானவர். கஞ்சர், எளிதில் பிறரை நம்பாதவர். சந்ததி விருதியுண்டு. இளைத்த ஒல்லியான தேகம் உள்ளவர். தொங்கும் கன்னம், தொய்ந்த தோள்கள், வயதுக்கு அதிகமான தோற்றமும் உள்ளவர். பலன் கருதியே பிறருக்கு உதவுபவர், அரசு தரப்பு வேலைகள் உண்டு, மிகவும் சந்தேக புத்தி உள்ளவர். ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்துகொண்டு இருக்கும். சனி ஜாதகத்தில் நன்கு அமைந்தால் தெளிவு, தியாக புத்தி இருக்கும். தீர்கதரிசியாகவும் இருப்பார். அரசாங்க வேலை, தொழிற்சாலை, எண்ணெய் வள வாரியம், விவசாயம் முதலிய தொழில் உண்டு. மூட்டு வலி, ருமாட்டிசம், கால் சம்பந்தமான நோய்கள் உண்டு. 3,4,5,7,8,10,32,37 வது வயதுகளில் தண்ணீர், சுரம், விஷம் இவற்றால் தொல்லைகள் ஏற்படலாம். ஆவணி மாத தேய்பிறை ஞாயிறு உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் உதய காலத்தில் மரணம் ஏற்படலாம்.
கும்ப லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள். பெண் நண்பர்கள் அதிகம் உண்டு. பித்த சம்பந்தமான நோயுடையவர்கள். நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர். புத்திர மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துகொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கறுப்பு நிறமுடைய உயர்ந்த உடல் வாகு, முட்டை போன்ற நீள்வட்ட முகம், ஒட்டிய கன்னம், அழகிய தோள்கள், பெருத்த வயிறு இவை எல்லாம் கலந்த தோற்றமுடையவர். நோய் அதிகம் ஏற்படாது. கலை இலக்கியம், நாட்டியி பயிற்சி, சிற்ப கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்கு சேவை செய்யும் மனபான்மையும் உண்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்து தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞான துறைகளிலும் ஈடுபாடு உண்டு. தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார். இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம். சீதள பாதிப்பு, இதய நோய், வாத நோய், வெண் குஷ்டம் போன்ற தோள் நோய்கள், வாதம், வலிப்பு, மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படலாம். சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழகிழமை மாலை மரணம் ஏற்படலாம்.
மீன லக்னம்
செயல்வீரர், திறமைசாலி, ஆன்மீக உணர்வுமிக்கவர், உண்மையை விரும்பவர், இறக்க மனமுடையவர், ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வமுடையவர். பிறரது பொருட்கள் பால் விருப்பமுடையவர், மலர்கள் பால் ஆசையுடையவர், இரண்டு திருமணம் நடைபெறும் (இல்லையெனில் பிற பெண்கள் தொடர்பிருக்கும்). பயிர் தொழிலில் செல்வமும், நிறைய வயல்களும் உடையவர். ஞானி, பெரியோர், அந்தணர் இவர்கள் பால் பக்தி விசுவாசம் உள்ளவர். அழகர், வீரர், வாசனை பொருட்களில் பிரியர், அதிக செலவாளி, கண்,காத்து நோய்கள் ஏற்படும். அளவக் உண்பவர், ஆடை அணி அலங்கார பிரியர். அஹிம்சையில் பற்று உண்டு. சிக்கல்கள் வரும்போது சமாளிக்க தைரியமற்றவர், சாத்வீக குணம் உண்டு. லக்னம் அசுப சம்பந்தம் பெற்றால் சிற்றின்பத்தில் இச்சை அதிகமுண்டு. காவியம், நாடகம், சங்கீதம், நடனம் இவற்றில் ஈடுபாடு உண்டு. அமானுஷ்யமான விஷயங்களை ஆரய்வ் ஆராய்வதில் சமர்த்தர். மானசீக தொழிலே இவர்க்கு பெரும்பாலும் அமையும். யோகம், தியானம் போன்றவற்றில் சாதனையாளர். நீர்நிலை, கடல் சம்பந்தமான தொழில்கள் அமையும். ஏழையாயினும் முயன்று வசதிகளை பெறுவார். நண்பர்கள் மத்தியில் மறைமுகமான எதிரிகள் உண்டு. சிலேத்தும நோய்கள் ஏற்படலாம். 12, 20 வது வயதில் காய்ச்சலாலும், 28 வது வயதில் இருமல் போன்ற வியாதிகளாலும் தொல்லை ஏற்படும். சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.