தமிழ் ஜோதிட களஞ்சியம்ஜாதகத்தில் வீடுகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.

  • 4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.

  • குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
  • புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.

தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.